சென்னை,
“தமிழ்நாட்டில், 1,020 திரையரங்குகள் உள்ளன. அந்த திரையரங்குகளில் 25 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தார்கள். கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டன. நேற்றுடன் 151-வது நாளாக திரையரங்குகள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன.
10 லட்சம் குடும்பங்கள்
இதனால், திரையரங்க ஊழியர்கள் மற்றும் திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த குடும்பங்களை சேர்ந்த 3 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். படப்பிடிப்பு நடைபெறாததால் திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களை காப்பாற்றும்படி, மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.
திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருபவர்கள்தான் எங்கள் முதலாளிகள். அவர்களை காப்பாற்றும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதற்கு மத்திய-மாநில அரசுகள் கூறும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.
நல்ல முடிவு
அதனால் மத்திய-மாநில அரசுகள் நல்ல முடிவெடுத்து படப்பிடிப்புகளை தொடங்குவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் உடனடியாக உத்தரவிட வேண்டும்.”